
அரவணைத்து
இன்புரவைத்து
புன்னகை பூக்கவைப்பது.



அம்மா
இந்த மூன்றெழுத்தை உச்சரித்தாலே
அனைவர் மனதிலும் ஆயிரமாயிரம்
பட்டாம் பூச்சிகள் நெஞ்சினில் பறந்திடும் .
மகள்
எனும் சொந்தம் பிறக்க
ரத்தமும் சதையுமாய் எனக்கு
உயிர் கொடுத்த அன்பு தெய்வமே !
அன்பு
என்ற பேரின்பத்தைத் தவிர
வாழ்க்கையில் ஒருசிறு துன்பத்தையும்
அறிய விடாமல் எவராலும் ஈடு
செய்ய முடியா வண்ணம் வளர்த்திட்டாய் .
கல்வி
எனும் பெருங்கடலில் தோணியாய்
துணைநின்று பிள்ளைகளை நீந்தவைத்து
அறிவு எனும் முத்தை எடுக்கவைத்தாய்
கலைமகளின் பெயரை நீ பெற்றதாலோ !
அறிவு
எனும் நீரை ஊற்றி
ஏணியாய் எங்களை ஏற்றிவிட்டு
ஆசை ஆசையாய் பார்த்திட்ட உனக்கு -
பிள்ளை
எனும் செல்வங்கள் உனக்களித்த
துன்பங்களை எவரிடமும் கூறாமல்
ஆழ்மனதிலே அனைத்தையும் பூட்டி வைத்தாய் .
அனாதை
எனும் கொடிய வார்த்தையின்
அர்த்தத்தை நீ எங்களை இப்பொல்லா
உலகில் விட்டுச்சென்ற அந்நாளில் உணர்ந்தேன் .
பத்து
வருடங்கள் உடலால் எமைநீங்கி
உருண்டோடினாலும் உன் நினைவலைகள்
எம்மில் நித்தமும் அலை மோதிக்கொண்டிருக்கின்றன .
எல்லா
சொந்தங்கள் இருந்தும் பிள்ளைகளின்
வளர்ச்சியை நீ உயிருடன் அனைத்தையும்
ரசித்துமகிழ இல்லையேஎன என்மனம் ஏங்குகிறது .
நன்றி
என்ற ஒற்றைச் சொல்லில்
நம் தாய்சேய் பந்தத்தை
கொச்சைப் படுத்த என்மனம் விரும்பவில்லை .
இந்த
பிறவியில் மறு முறை
எனக்கு தாயாய் பிறக்க
முடியாதென்பதால் ரத்தமும் சதையுமாய்
என்னுள் மகளாய் ஊன்றி
என் வாழ்வில் நிறைந்திடுவாய்
என உன் வருகைக்கு நித்தமும்
ஏங்கிக் கொண்டிருக்கும் உன் அன்பு
மகள்.